சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ராஜாஜியின் படத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். படம்: சந்தீப் சக்சேனா 
இந்தியா

எல்எல்எம் பட்டம் பெற்ற முதல் பெண் மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் மரணம்

செய்திப்பிரிவு

சட்டப்படிப்பில் முதுநிலை பட்டம் பெற்ற நாட்டின் முதல் பெண் பட்டதாரிஎன்ற பெயர் பெற்றவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான லில்லி தாமஸ் நேற்று டெல்லியில் உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்து திருவனந்தபுரத்தில் வளர்ந்தவர் லில்லி தாமஸ். பின்னர், அவரது குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. சட்டப்படிப்பை முடித்து,1955-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்தார். பின்னர், 1959-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். முதுநிலை பட்டம் பெற்றார். நாட்டில் இப்பட்டம் பெற்ற முதல் பெண் பட்டதாரி என்ற பெருமைக்குரியவர்.

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் மேல்முறையீடு செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை முன்பு இருந்தது. இதை எதிர்த்து லில்லி தாமஸ் வழக்கு தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்றார்.

‘அட்வகேட் ஆன் ரெக்கார்டு’ என்ற பட்டியலில் இருப்பவர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வாதிட முடியும் என்ற உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவர். உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராக சேர்ந்தபோது அங்கு 5 பெண் வழக்கறிஞர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

பல்வேறு முக்கிய வழக்குகளில் திறம்பட வாதாடி தீர்ப்புகளை பெற்றவர். நாட்டின் மூத்த பெண் வழக்கறிஞராக திகழ்ந்த லில்லி தாமஸ் (91) நேற்று டெல்லி பட்பர்கஞ்சில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் சென்னையில் ‘தி மெட்ராஸ் டைம்ஸ்’ நாளிதழ் நடத்தி வந்த பிலிப் தாமஸின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT