இந்தியா

குடியுரிமை திருத்த மசோதா; சம உரிமை நீடிக்க வேண்டும்: ஐரோப்பிய யூனியன் கருத்து

செய்திப்பிரிவு

இந்தியாவில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது, இதில் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சம உரிமை நீடிக்கும் என நம்புவதாக ஐரோப்பிய யூனியன் தூதர் யுகோ அஸ்டோ கூறியுள்ளார்.

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்தநிலையில் இதுகுறித்து இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் யுகோ அஸ்டோ கூறுகையில் ‘‘இந்தியாவில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது. இதில் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சம உரிமை நீடிக்கும் என நம்புகிறோம்’’ என கூறினார்.

SCROLL FOR NEXT