மத்திய அரசின் குடியுரிமை சட்ட மசோதாவின்படி குடியுரிமை பெறுபவர்கள் பட்டியலில் ஷியா முஸ்லிம் பிரிவினரையும் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக உபியின் ஷியா வஃக்பு வாரியத்தின் தலைவர் வசீம் ரிஜ்வீ மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து வசீம் ரிஜ்வீ தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்து, சீக்கியர் ஜெயின், கிறித்தவர் மற்றும் பார்சியை போல் முஸ்லிம்களின் ஷியா பிரிவினரும் பாகிஸ்தான், பங்காளாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஷியாக்களையும் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவன்றி, சவூதி அரேபியா, சிரியா போன்ற முஸ்லிம் நாடுகளிலும் ஷியாக்களும் தம் மதப்பிரிவின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கடந்த 1,400 ஆண்டுகளாக பெரும்பாலான முஸ்லிம்களின் சன்னி பிரிவினர் நமது ஷியாக்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
எனவே, இந்தியாவின் சிறுபான்மையினரான முஸ்லிம்களில் நாம் சிறுபான்மையினராக இருக்கிறோம். எனவே, வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருவோருக்கு கிடைக்கும் குடியுரிமை பட்டியலில் ஷியாக்களையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.
முஸ்லிம்களின் சன்னிக்கு பிறகு இரண்டாவது முக்கிய பிரிவாகக் கருதப்படுபவர்கள் ஷியாக்கள். உபியில் அதிகமாக உள்ள இப்பிரிவினர் பல நூற்றாண்டுகளாக சன்னிக்களின் மசூதியில் தொழுவதை தவிர்த்து வந்தனர். இவர்களுக்காக எனத் தனியான உள்ள மசூதிகளில் சன்னி முஸ்லிம்களும் தொழுவதை தவிர்த்தனர்.
உ.பியில், இதுபோன்ற காரணங்களால் ஷியா-சன்னிக்கள் இடையே வகுப்பு மோதல்களும் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. எனினும், ஒரிரு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட முற்போக்கான மாற்றத்தினால், இருவரும் இணைந்து உபியின் சில மசூதிகளில் தொழுவதும் துவங்கி உள்ளது.
உ.பியின் ஷியா முஸ்லிம்கள் இடையே சர்ச்சைக்குரிய தலைவராக இருக்கும் வசீம் ரிஜ்வீ, துவக்கம் முதல் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக இருப்பவர். அயோத்தி வழக்கின் தீர்ப்பிற்கு முன் அந்த நிலத்தை கோயில் கட்ட முஸ்லிம்கள் விட்டுத்தரவும் வலியுறுத்தியவர் என்பது நினைவுகூரத்தக்கது.