பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்: பாஜக எம்.பி.க்களுக்கு முதலிடம்; காங்கிரஸ் 2-வது இடம் : ஏடிஆர் தகவல்

பிடிஐ

பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்து வழக்குகளைச் சந்தித்துவரும் எம்.பி.க்களில் பாஜக எம்.பி.,எம்எல்ஏ க்கள் முதலிடத்திலும், காங்கிரஸ் கட்சி எம்பி.எம்எல்ஏக்கள் 2-வது இடத்திலும் உள்ளனர் என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்துள்ள எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப்பின் 506 எம்.பி.க்கள் வேட்புமனுவை ஆய்வு செய்ததில் 2 எம்.பி.க்கள் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உடையவர்களாக இருந்தார்கள். 2019-ம் ஆண்டில் 540 எம்.பி.க்கள் வேட்புமனுவில் உள்ள பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்ததில் அதில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்துள்ளவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதி்கரித்துள்ளது. ஏறக்குறைய 850 சதவீதம் உயர்ந்துள்ளது.

756 எம்.பி.க்கள், 4063 எம்எல்ஏக்களின் பிரமாணப்பத்திரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அதில் 78 எம்பி,எம்எல்ஏக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது தெரியவந்தது. இதில் 18 பேர் எம்.பி.க்கள், 58 பேர் எம்எல்ஏக்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் 572 வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைச் சந்தித்து மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இதில் ஒருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைப் பொறுத்தவரையில் பாஜக சார்பில் 21 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் 16 எம்பிக்களும் , எம்எல்ஏக்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் 7 பேரும் வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். திமுகவில் 2 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகளைச் சந்தித்துள்ள 66 பேருக்குக் கடந்த 5 ஆண்டுகளில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி 46 பேருக்கும், பகுஜன் சமாஜ் கட்சி 40 பேருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 15 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில் 9 பேரும், ஆம்ஆத்மி வேட்பளார்கள் 8 பேரும், டிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களில் 6 பேரும் பெண்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகளைச் சந்தித்துள்ளவர்கள் என தங்கள் பிரமாண பத்திரித்தில் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. எம்எல்ஏக்கள் 16 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 பேரும் குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். ஆந்திராவில் 8 பேரும், தெலங்கானாவில் 5 பேரும் குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பது தெரிந்தே, வேட்புமனுவில் குறிப்பிட்ட பின்னும் மகாராஷ்டிராவில் 84 பேருக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கியுள்ளன. அதைத் தொடர்ந்து பிகாரில் 75 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 69 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் 3 எம்.பி.க்கள், 6 எம்எல்ஏக்கள் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் இருக்கின்றன.

இவ்வாறு ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT