இந்தியா

காஷ்மீரின் கைதான தலைவர்கள் விடுதலையை அம்மாநில நிர்வாகம் முடிவு செய்யும் –மக்களவையில் அமித் ஷா தகவல் 

ஆர்.ஷபிமுன்னா

ஜம்மு-காஷ்மீரில் கைதான தலைவர்கள் விடுதலையை அம்மாநில அரசு முடிவு செய்யும் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். அவர், காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் இந்த தகவலை அளித்தார்.

மக்களவையின் இன்று ஜம்மு-காஷ்மீரின் எல்லைகளில் தீவிரவாதிகள் ஊடுறுவல் குறித்த கேள்வி எழுந்தது. இதற்கு பதில் மத்திய உள்துறை துணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி அங்கு அமைதி திரும்புவதாகக் கூறி ஒரு விரிவான அறிக்கையை படித்தார்.

அப்போது, மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவரான அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, ‘வெளிநாடுகளின் எம்.பி.க்கள் காஷ்மீருக்கு செல்ல முடிகிறது. ஆனால் அங்கு சிறைபட்டுள்ள பரூக் அப்துல்லா உள்ளிட்ட நமது எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு எப்போது வருவார்கள்?’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறும்போது, ‘எந்த தலைவர்களும் ஒருநாள் கூட அநாவசியமாக சிறைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா 11 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டியதாயிற்று.

அப்போது, மத்திய அரசின் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தது. மாநிலங்களின் நிர்வாகங்களில் நாம் மற்ற அரசுகள் போல், போன் செய்து தலையிட மாட்டோம். தலைவர்கள் விடுதலை குறித்து அம்மாநில நிர்வாகம் முடிவு செய்யும்.’ எனத் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தலைவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT