கோப்புப்படம் 
இந்தியா

ஹைதராபாத் என்கவுன்ட்டரை விசாரிக்கக் கோரும் பொதுநல மனு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

பிடிஐ

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதைத் தனியாக விசாரிக்கச் சிறப்புக் குழுவை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர், 4 பேர்கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் லாரி ஓட்டுநர் முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நான்கு பேரையும் விசாரணைக்காக கடந்தவாரம் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது 4 பேரும் போலீஸாரின் துப்பாக்கியைப் பிடுங்கி தாக்க முயன்றபோது, போலீஸார் அவர்களை என்கவுன்ட்டர் செய்ததாகக் கூறப்பட்டது. போலீஸாரின் இந்த என்கவுன்ட்டருக்கு பொதுமக்கள் தரப்பில் ஒருபுறம் மிகப்பெரிய ஆதரவும், மற்றொரு தரப்பில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. சட்டத்தை போலீஸார் கையில் எடுக்கக்கூடாது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று ஒருதரப்பினர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ஹைதராபாத் என்கவுன்ட்டர் செய்த போலீஸார் மீது தனியாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் தாக்கல் செய்த அந்த பொதுநலன் மனுவில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் கொலை செய்த போலீஸார் மீது சார்பற்ற விசாரணைக் குழு அணைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், இந்த என்கவுன்ட்டர் போலியானது என்று கோரி இருந்தார்.

மேலும், மற்றொரு வழக்கறிஞர் பி.எல்.சர்மா, பிரதீப் சர்மா ஆகியோரும் இதேபோன்ற மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்விடம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே விரைவில் பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT