நாடாளுமன்ற வளாகத்தில் முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் 
இந்தியா

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: முஸ்லிம் லீக், அசாம் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் லீக் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்து ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக தலைமையில் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாலும், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததாலும் இதை நிறைவேற்ற முடியவில்லை.

மேலும், மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது. மக்களவை காலம் காலாவதியானது மசோதாவும் காலாவதியானது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.
அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

மக்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்யும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிற்பகலில் மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை அறிமுகம் செய்வார் எனத் தெரிகிறது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் லீக் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்து ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

SCROLL FOR NEXT