இந்தியா

தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும்: மாநில அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான முகமது ஆரிஃப், சிந்தகுண்டா சென்னகேசவலு, ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் ஆகிய 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்களும் தெலங்கானாவுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலரும் தெலங்கானா என்கவுன்ட்டரைக் கண்டித்த நிலையில், அம்மாநில அரசு 8 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு சம்பவத்தை விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பகவத் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையை மேற்கொள்வார்கள். என்கவுன்ட்டரில் சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்வார்கள். விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்.

இதற்கிடையில், தெலங்கானாவில் நடந்த என்கவுன்ட்டர் போலியானது என்று தொடரப்பட்ட வழக்கு இன்று தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கிற்காக இன்று இரவு 8 மணி வரை கொல்லப்பட்ட நால்வரின் சடலத்தையும் பாதுகாத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT