கர்நாடகத்தில் கடந்த 5-ம் தேதி 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தல் வாக்கு நாளை(திங்கள்கிழமை) எண்ணப்படுகின்றன. பெரும்பான்மைக்கு 6 எம்எல்ஏக்களே தேவை என்ற நிலையில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது.
கர்நாடகாவில் முந்தைய குமார சாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத் தின் கீழ் 17 பேரையும் தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக 17 பேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “தகுதி நீக்கம் செல்லும். அதே வேளையில் 17 பேரும் இடைத் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை” என தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையே 2 எம்எல்ஏக்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால், 15 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 67.91 சதவீதம் வாக்குகள் பதிவாகின
225 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 112 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், இதில் இரு எம்எல்ஏக்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால், 223 மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில் பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை.
தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு 66 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிடம்34 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். மேலும், பிஎஸ்பி கட்சிக்கு ஒரு இடம், நியமன எம்எல்ஏ ஒருவர், சபாநாயகர் ஆகியோர் உள்ளனர். ஆதலால், எடியூரப்பா தனது பெரும்பான்மைக்கு 6 இடங்களில் வென்றாலே போதுமானது.
நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் பலத்த போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை பிற்பகலுக்குள் 15 தொகுதிகளின் முடிவுகள் ஏறக்குறைய தெரிந்துவிடும்.
இந்தத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய 3 கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தியதால், மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக 9 முதல் 12 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. இதனால் முதல்வர் எடியூரப்பாவும், ஆளும் கட்சியினரும் மிகுந்த நம்பிக்கையில் இருக்கின்றனர்.
முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் பேசுகையில், " இடைத் தேர்தலில் 13 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களிடம் மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நிலையான அரசையும், வளர்ச்சியையும் மக்கள் கேட்கிறார்கள். இது பாஜகவால் தர முடியும்" எனத் தெரிவித்தார்
இந்த இடைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் நேருக்குநேர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களில் ஜேடிஎஸ் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால், கடும் போட்டி நிலவுகிறது.
ஒருவேளை பாஜக பெரும்பான்மையைப் பெறாத பட்சத்தில் மீண்டும் கர்நாடக அரசியலில் அணி மாறும் காட்சிகள் தொடங்கும். அதேசமயம் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சியும் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கும், ஜேடிஎஸ் தலைவர் ஹெச்டி குமார சாமிக்கும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு இந்த தேர்தல் முடிவுகள் முக்கியமாக இருக்கும்.