இந்தியா

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க புதிய சட்டங்கள் அல்ல மனமாற்றமே அவசியம்: வெங்கய்ய நாயுடு பேச்சு

ஏஎன்ஐ

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க புதிய சட்டங்கள் அல்ல மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்படுத்துவதே இந்த தருணத்தின் அவசியம் என குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவின் புனேவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கய்ய நாயுடு, "இந்தியக் கலாச்சாரம் பெண்களைத் தாயாகவும், சகோதரியாகவும் பாவித்து வணங்குகிறது. ஆனால் நம் நாட்டில் அண்மைக்காலமாக நடைபெறும் சம்பவங்கள் வெட்கக்கேடானவை. அவை தேசத்துக்கு அவப்பெயர் கொண்டுவருகிறது என சிலர் கூறுகின்றனர். ஆனால், நாமே நம் தேசத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு சமூகத்தில் மனமாற்றம் ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கை குறித்து அறிவுரைகளே இப்போது மிகவும் அவசியம்.

அதனால்தான் கல்வி நிலையங்களிலேயே கலாசாரம் பற்றி குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தல் அவசியம் என நான் வலியுறுத்தி வருகிறேன். இது ஆசிரியர்களின் பொறுப்பு. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இனியும் அரங்கேறாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை அரசியல் ரீதியாக அணுகாமல் மதம் , கலாச்சாரம் ஊடாகப் பார்க்க வேண்டும்.

நிர்பயா சம்பவத்துக்குப் பின்னர் நாம் சட்டத்திருத்தம் மேற்கொண்டோம். ஆனால் இதனால் ஏதாவது மாற்றம் வந்ததா? அதனால், அரசியல் நிர்வாக ரீதியாக சில நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT