ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான என்கவுன்ட்டருக்கு பெரும்பாலான மக்களும், அரசியல் கட்சியினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயத்தில், ஒருசில தரப்பினர், இந்த என்கவுன்ட்டருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்த ஒரு வழக்கிலும் நீதிமன்ற தீர்ப்பு வரை காத்திருக்க வேண்டும் என்பதும், சட்டத்தை போலீஸார் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதும் அவர்களின் வாதங்களான உள்ளன.
இந்நிலையில், ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு தெலங்கானா அரசு மற்றும் அம்மாநில காவல்துறைக்கு அந்த ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், என்கவுன்ட்டர் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்தது. இந்த சம்பவம் மிகவும் கவனமாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் கூறியிருந்தது. பத்திரிகை தகவலின் அடிப்படையில் தானாக முன் வந்து விசாரணையை தொடங்கியது.
தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் ஹைதராபாத் வந்து விசாரணையை தொடங்கினர். என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்திற்கு சென்று தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.
என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்கள் வைக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்றும் விசாரணை நடத்தினர். பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் சொந்த ஊரான கரீம் நகருக்கும் சென்று விசாரணை நடத்தினர்.