தெலங்கானாவில் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டியை (28) கடத்தி,பாலியல் வன்கொடுமை செய்து,எரித்துக் கொன்ற வழக்கில் தொடர்புடைய லாரி ஓட்டுநர்கள் உட்பட4 பேர் நேற்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையின்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தி தப்பி செல்ல முயன்றதால் என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாக போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
ஹைதராபாத் சம்ஷாபாத்தில் கால்நடை டாக்டராக பிரியங்கா ரெட்டி (28) பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 27-ம் தேதி இரவுபணி முடிந்து இருசக்கர வாகனத்தில் அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஷாத்நகர் பகுதியில்டயர் பஞ்சர் ஆனது தெரியவந்தது. லாரி ஓட்டுநர்கள் முகமது ஆரிஃப், சென்ன கேசவுலு மற்றும் லாரி கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேர் அவருக்கு உதவுவதுபோல நடித்து லாரியில் கடத்திச் சென்றனர். சுமார் 27 கி.மீ தொலைவு வரை லாரியை ஓட்டியவாறு பிரியங்கா ரெட்டியை மாறி, மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் ஷாத்நகர் மேம்பாலத்தின் கீழே பிரியங்காவை இறக்கி, பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் கொளுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக ஷாத்நகர் போலீஸ் வழக்கு பதிவு செய்து முகமது ஆரிஃப், சென்ன கேசவுலு, சிவா, நவீனை கைது செய்தனர். நீதிபதி உத்தரவின்பேரில் 4 பேரும் செஞ்சல் கூடா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் வழக்கை விசாரிக்க மகபூப்நகரில் தனி விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இதனிடையே, குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. அதன்படி 7 நாட்கள், அதாவது வரும் 12-ம் தேதி வரை 4 பேரையும் போலீஸார் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கடந்த வியாழக்கிழமை 4 பேரையும் போலீஸார் சிறையில் இருந்து அழைத்துச் சென்றனர். மகபூப்நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
கொலையாளிகள் பயன்படுத்திய லாரியை, போலீஸார் பறிமுதல் செய்து அதில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரியங்கா ரெட்டியின் ரத்த கறை, தலைமுடி போன்ற முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. பெட்ரோல் நிலையம், சுங்க சாவடி உள்ளிட்ட இடங்களில் சாட்சிகளிடம் நேரில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில், ஷாத் நகர் பாலத்தின் அருகே சுமார் 200 மீட்டர் தொலைவில் 4 பேரையும் சைபராபாத் நகர போலீஸ் ஆணையர் சஜ்ஜனார் தலைமையிலான போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பிரியங்கா கொலை செய்யப்பட்ட அதே இடம், அதே நேரத்தில் 4 பேரும் கொல்லப்பட்டனர்.
என்கவுன்ட்டர் குறித்து சைபராபாத் போலீஸ் ஆணையர் சஜ்ஜனார் செய்தியாளர்களிடம் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: பிரியங்கா ரெட்டி கொலை குறித்து 4 பேரிடமும் விசாரணை நடத்தினோம். அப்போது அவரின்செல்போன், பவர் பேங்க் போன்றவற்றை மறைத்து வைத்திருப்பதாக அவர்கள் கூறினர். வெள்ளிக்கிழமை அதிகாலை 4 பேரையும் ஷாத்நகர் சட்டான்பல்லி மேம்பாலத்தின் கீழ் போலீஸார் அழைத்துச் சென்றோம். ‘எப்படி கொலை செய்தீர்கள், பிரியங்காவின் செல்போனை எங்கு மறைத்து வைத்துள்ளீர்கள். அதை எடுத்துத் தாருங்கள்’ என போலீஸார் கூறினர். நாங்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில், போலீஸாரிடம் இருந்த 2 துப்பாக்கிகளை முகமது ஆரிஃப், சென்ன கேசவுலு ஆகியோர் சாதுரியமாக பிடுங்கி போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர். இதில், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு கான்ஸ்டபிள் காயமடைந்தனர். வேறு வழியின்றி போலீஸ் குழுவினர் தங்களை தற்காத்துக் கொள்ள அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றார்.
இறுதி சடங்கை புறக்கணித்த கிராம மக்கள்
சம்பவ இடத்திலிருந்து சடலங்களை வேனில் ஏற்றி மகபூப்நகர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் நேற்று மாலை கொண்டு சென்றனர். அங்கு 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் அவரவர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதில் முகமது ஆரிஃப் உடல் அவரது சொந்த கிராமமான ஜக்ளேருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்றிரவு உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்ன கேசவுலு, சிவா, நவீன் ஆகியோரின் உடல்கள் அவர்களது சொந்த கிராமமான குடிகண்ட்லாவுக்கு கொண்டு செல்லப்பட்டன. வீடுகளுக்கு உடல்கள் கொண்டு செல்லப்படாமல் நேரடியாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. உறவினர்களைத் தவிர கிராம மக்கள் அனைவரும் இறுதிச் சடங்கை புறக்கணித்தனர்.
போலீஸாருக்கு பூக்கள் தூவி மக்கள் வரவேற்பு
என்கவுன்ட்டர் குறித்த செய்தியை அறிந்த பொதுமக்கள், சம்பவ இடத்தில் குவிந்தனர். போலீஸார் மீதும், ஆணையர் சஜ்ஜனார் மீதும் பாலத்தின் மேலிருந்து பூக்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் போலீஸாருக்கு இனிப்பு வழங்கினர். தெலங்கானா மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
12 தோட்டாக்கள் பறிமுதல்
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் 4 தாசில்தார்கள் முன்னிலையில் கைரேகை நிபுணர் குழுவினர் ஆதாரங்களை சேகரித்தனர். அப்போது 12 தோட்டாக்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தது தெரியவந்தது. இவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று, இறந்து போன பிரியங்கா ரெட்டியின் செல்போன், பவர் பேங்க், செருப்பு போன்றவற்றை சேகரித்தனர்.