பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன டர் சம்பவத்துக்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சித்துள்ளனர்.
இதுபோலவே உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்திற்கு வரும்போது 5 பேர் அவரை உயிரோடு எரித்தனர். இதில் பலத்த காயமடைந்த அந்தப்பெண், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில் இதுபற்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை செயலாளர் கடிதம் அஜய் குமார் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில் ‘‘பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு அரசின் கடமையாகும். இதுபோன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டங்கள் இயற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் வந்தால் மாநில அரசுகளும், மாநில காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.