தெலங்கானா என்கவுன்ட்டர் உண்மையானதா என்று விசாரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை அளிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தன. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "ஹைதராபாத் சம்பவத்தில் நடந்தது என்னவென்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு பொறுப்பான நபராக நான் சொல்ல விரும்புவதெல்லாம், இது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க முயற்சித்தனரா? அப்போதுதான் என்கவுன்ட்டர் நடந்ததா என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்" எனக் கூறினார்.
முன்னதாக இன்று காலை ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் இதுபோன்ற கருத்தையே தெரிவித்திருந்தார்.
அவர் தனது ட்விட்டரில், "பலாத்காரம் ஒரு கொடூரக் குற்றம். இதை வலிமையான சட்டங்களுடன் எதிர்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எனக்கு எந்த ஒரு அனுதாபமும் இல்லை.
ஆனால், என்கவுன்ட்டர் கொலைகள் என்பது நமது ஜனநாயக அமைப்புக்கு களங்கம் விளைவிக்கக் கூடியவை. உடனடியாக நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அழுத்தமும் இருந்ததை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும் இது தீர்வல்ல" எனக் குறிப்பிட்டிருந்தார்.