இந்தியா

ஜெய் தெலங்கானா போலீஸ்.. ட்விட்டரில் கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் உமா பாரதி

ஏஎன்ஐ

தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், "ஜெய் தெலங்கானா போலீஸ்" என ட்விட்டரில் கொண்டாடியுள்ளார் பாஜக மூத்த தலைவர் உமா பாரதி.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நிகழ்வு இது. இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தாரின் சோகம் என்றும் தீராது ஆனால் இந்த என்கவுன்ட்டர் பலியான சகோதரின் ஆன்மாவை சாந்தியடையச் செய்யும். இந்திய பெண்களின் மனதில் ஏற்பட்ட அச்சம் குறையும்.

தெலங்கானா போலீஸிடமிருந்து மற்ற அரசுகளும் குற்றவாளிகளுக்கு உடனடியாக பாடம் கற்பிப்பதைக் கற்றுக் கொள்ளும் என நம்புகிறேன்" எனப் பதிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த நவம்பர் 27-ல், தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். சம்பவத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்ட அழைத்துச் சென்றபோது போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்ததால் அவர்களை சுட்டதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT