தெலங்கானா பெண் மருத்துவர் கொலையாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தனது காயத்துக்கு மருந்து போல் இருப்பதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். நிர்பயாவின் தந்தையும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து 2012 டிசம்பரில் தலைநகர் டெல்லியில் பாலியல் கூட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "டிசம்பர் 2012-ல் என் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார்.
அவரின் மறைவுக்குப் பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் தினமும் மரண வேதனை அனுபவித்து வருகிறோம். அன்றுமுதல் நாங்கள் ஏறாத கோர்ட் வாயில் இல்லை. குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வேண்டி போராடி வருகிறோம். ஆனால், நீதிமன்றங்கள் மனிதநேயம் பற்றி பேசுகின்றன.
இன்று இத்தகைய தண்டனைகள் அவசியமாகின்றன. தெலங்கானா போலீஸாரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. இது ஒரு நல்ல மாற்றம். தெலங்கானா என்கவுன்ட்டர் எங்களின் காயத்துக்கு மருந்து. போலீஸார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது" என்றார்.
நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங், "இந்த என்கவுன்ட்டர் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் மகளை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் இன்று உயிருடன் இருக்கின்றனர் நாங்கள் தினமும் இறந்து கொண்டிருக்கிறோம். தெலங்கானா பெண்ணின் பெற்றோருக்காவது இந்த நிலைமை ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. தெலங்கானா போலீஸார் நல்ல வேலை செய்துள்ளனர்" என்றார்.