இந்தியா

பிறந்து சில மணி நேரங்களேயான பெண் குழந்தை 21 மாடி கட்டிடத்திலிருந்து வீசி எறிந்து கொல்லப்பட்ட சம்பவம்: மும்பையில் அதிர்ச்சி

பிடிஐ

மும்பையில் உள்ள ஜெய்பாரத் வளாகத்தின் 21 மாடிக் கட்டிடத்தின் குளியலறை ஒன்றிலிருந்து பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தையை அடையாளம் தெரியாத நபர் வீசி எறிந்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை புறநகர்ப்பகுதியான லால்ஜிபதா பகுதியில் குடிசை மாற்று வாரிய ஆணையத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வியாழன் மதியம் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தொப்புள் கொடி கூட அதன் உடலிலேயே இருந்ததால் பிறந்த குழந்தை, அதுவும் பெண் குழந்தை என்று தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் உடலை கட்டிட வாட்ச்மேன் பார்த்து அலறியடித்துக் கொண்டு மற்றவர்களையும் அங்கு வரவழைத்துள்ளார்.

குழந்தை எந்த மாடியிலிருந்து வீசப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை, போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். குடியிருப்புவாசிகளை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கண்டிவலி போலீஸ் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்தாடும் நிலை பற்றி சமூகவலைத்தளங்களிலும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெண் குழந்தை என்பதனால் தூக்கி எறிந்து கொல்லப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT