கோப்புப்படம் 
இந்தியா

உ.பி.யில் பாலியல் கொடுமைக்கு உள்ளான இளம்பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற 5 பேர் கைது

செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உ.பி.யில் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலர் கடத்தி பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கானது ரேபரேலியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக நேற்று காலை அந்தப் பெண் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் சிலர், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினர். இதில், அப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர், அவரை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அவரை லக்னோ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், உடலில் 90 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் உள்ளதால் அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்ப தாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அவர் டெல்லியில் உள்ள சப்தார்ஜங் மருத்துமவனைக்கு மாற்றப்பட்டார்.

வாக்குமூலம்

இதனிடையே, தன்னை எரித்து கொல்ல வந்தவர்கள் யார் என்பது குறித்து அப்பகுதி வட்டாட்சியரிடம் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ஹரிசங்கர் திரிவேதி, ராம் கிஷோர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய், சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி ஆகியோர் தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அப்பெண் கூறியுள்ளார். மேலும், அவர்களில் சிவம் திரிவேதியும், சுபம் திரிவேதியும் கடந்த ஆண்டு தன்னை பலாத்காரம் செய்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்நிலையில், இந்தச் சம்பவத் துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

உ.பி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பட்டப்பகலில் இளம் பெண் ஒருவருக்கு நடந்திருக்கும் இந்த அநீதி, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. அந்தப் பெண் மீண்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை யில், “உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையில் காட்டாட்சி நடை பெற்று வருவதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். இளம்பெண் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலுக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் வெட்கப்பட வேண் டும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட வர்கள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT