இந்தியா

பொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய அரசு மீது சிதம்பரம் கடும் சாடல்

செய்திப்பிரிவு

இந்த நிதியாண்டில் மொத்த பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும், தற்போதைய பொருளாதார சூழலில் அதுவே பெரிய விஷயம் என முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கூறினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 106 நாட்களுக்குப் பிறகு அவர் நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார்.

ப.சிதம்பரம் திஹார் சிறையிலிருந்து நேற்று வெளியே வந்தார், காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில் விடுதலையான மறுநாளான இன்று நாடாளுமன்றம் வந்தார். வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர். சிதம்பரமும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து அவர் மாநிலங்களவைக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த நிதியாண்டு தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் பொருளாதார சிக்கலை பாஜக அரசால் யூகித்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

அதுமட்டுமின்றி மத்திய அரசே பொருளாதாரத்தை முடக்கும் வகையில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறது. இதனால் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது.

இந்த நிதியாண்டில் மொத்த பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும். தற்போதைய பொருளாதார சூழலில் அதுவே பெரிய விஷயம்.

பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடி பேசுவதே இல்லை. அதனை அமைச்சர்களிடம் விட்டுவிடுகிறார். தவறுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் அவர்களே பதிலளிக்கிறார்கள். இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் தானாக உருவானதல்ல. மனிதர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள பேரழிவு.

பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க முடியும். ஆனால் மத்திய அரசுக்கு அதனை செய்யும் திறன் இல்லை. பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை காப்பாற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் தான் முடியும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

SCROLL FOR NEXT