இந்தியா

மாநகராட்சி ஊழியரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சுரேந்தர் சிங் கைது

செய்திப்பிரிவு

மாநகராட்சி ஊழியரை தாக்கிய தாக டெல்லி கன்டோன்மென்ட் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சுரேந்தர் சிங்கை போலீஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேந்தர் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

டெல்லி துக்ளக் சாலையில் கடந்த 4-ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவரின் ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதிக்க முயன்றபோது, அங்கு வந்த சுரேந்தர் சிங் அதை தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி ஊழியரை தாக்கியதாக சுரேந்தர் சிங், அவரது கார் டிரைவர் பங்கஜ், உதவியாளர் பிரவீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எம்எல்ஏ சுரேந்தர் சிங் உள்ளிட்ட மூவரையும் டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.

இந்நிலையில் சுரேந்தர் சிங், பங்கஜ், பிரவீன் ஆகியோர் டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மூவர் மீதும் கடும் குற்றச்சாட்டுகள் இருப்பதாலும், சாட்சிகளை கலைக்கக் கூடும் என்பதாலும் மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்க போலீஸார் கோரினர். இதற்கு சுரேந்தர் சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரமேஷ் குப்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சுரேந்தர் உள்ளிட்ட மூவருக்கும் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT