இந்தியா

ஐ.கே.குஜ்ரால் அறிவுரையை நரசிம்ம ராவ் கேட்டிருந்தால்..: 1984 கலவரம் குறித்த மன்மோகன் கருத்தால் சர்ச்சை

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 1984 கலவரம் குறித்து முன்வைத்த கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

1997 - 98 கால கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ஐ.கே.குஜ்ரால். அவரின் 100-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.

அப்போது அவர் 1984-ல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றி பேசினார். அவர் பேசுகையில், "1984-ல் அந்த சோக நிகழ்வு நடந்தபோது குஜ்ரால் அன்றைய தினம் மாலை நேரத்தில் நரசிம்ம ராவின் வீட்டிற்குச் சென்றார். நரசிம்ம ராவிடம் நிலைமை மோசமாக இருக்கிறது ராணுவத்தின் உதவியைக் கோர வேண்டிய தருணமிது என்று எடுத்துரைத்தார். அன்று மட்டும் நரசிம்ம ராவ் குஜ்ராலின் அந்த அறிவுரைக்கு செவி மடுத்திருந்தார் என்றால் 1984 படுகொலை நடந்திருக்கவே இருக்காது" என்று பேசியிருந்தார்.

1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 3000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களும் அடிப்பட்டன. இன்றுவரையிலும் விமர்சனங்கள் நிலவுகின்றன.

இந்நிலையில், நரசிம்ம ராவின் பேரன் என்.வி.சுபாஷ் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

அவர், "மன்மோகன் சிங்கின் இந்த கருத்து ஏற்புடையது அல்லை. அவரின் கருத்து ஒரு குடும்ப உறுப்பினராக என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது. ஓர் உள்துறை அமைச்சரால் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் என்ன முடிவு எடுத்துவிட முடியும்? ஒருவேளை குஜ்ராலின் யோசனைக்கிணங்கி ராணுவத்தை மட்டும் அழைத்திருந்தால் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கும்" எனக் கூறியுள்ளார்.

நரசிம்ம ராவ் 1991- 96 கால கட்டத்தில் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார். அந்த வேளையில் மிக முக்கியமான பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, "1998-ல் ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் தலைமை திரும்பப் பெறாமல் இருந்திருந்தால் பாஜக அரசு அமைவது தவிர்க்கப்பட்டிருக்கும்" என்று பேசியிருந்தார்.

SCROLL FOR NEXT