நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்காமல் மத்திய அரசால் தடுக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 106 நாட்களுக்குப் பிறகு அவர் நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார்.
ப.சிதம்பரம் திஹார் சிறையிலிருந்து நேற்று வெளியே வந்தார், காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தநிலையில் விடுதலையான மறுநாளான இன்று நாடாளுமன்றம் வந்தார். வெங்காய விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர். ஜாமீனில் வெளியே வந்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரமும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறி மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர் மாநிலங்களவைக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் பங்கேற்க முடிந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்காமல் மத்திய அரசால் தடுக்க முடியாது’’ எனக் கூறினார்.