தற்போதைய பொருளாதார மந்தநிலையின் விளைவாகவே தமிழக ஆட்டோமொபைல் துறை பெரிதும் சரிந்துள்ளாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. இதை நேற்று மக்களவையில் அக்கட்சியின் எம்.பியான செல்லகுமார் மக்களவையில் தெரிவித்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரியின் காங்கிரஸ் எம்.பியான செல்லகுமார் மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாவது: தற்போதைய பொருளாதார மந்தநிலையின் விளைவாக தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறை பெரிதும் பாதித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான வேலையும், அரசாங்கம் பல கோடி வருவாயையும் இழந்துள்ளது. 'இந்தியாவின் டெட்ராய்ட்' என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் தான் ஆட்டோமொபைல் தொழில்களில் 30 சதவிகிதம் முதல் 35 சதவிகித வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் வசதி உள்ளது.
மொத்த ஆட்டோமொபைல் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியால் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வேலை இருந்தது. இதன் வருவாயில் தமிழகத்திற்கு சுமார் 25 சதவிகித வரி வருவாயாகக் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் சுமார் ஒ.இ.எம் வகை ஆட்டோமொபைல் ஆலைகள் 25 மற்றும் அதன் உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு,குறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழிற்சாலைகள் நிதி நெருக்கடியால், மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழல், சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கும். எனவே, சிறு,குறு மற்றும் நடுத்தர ஆலைகளை காக்க அதற்கான 28 சதவிகித ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். பொறியியல் பணிகளின் 12 சதவிகித ஜிஎஸ்டி வரியை ஐந்து சதவிகிதமாகவும் குறைக்க வேண்டுகிறேன்.
அதேபோல், இந்த துறையை விவசாயம் போன்ற முன்னுரிமைத் துறையாக அறிவித்து, அதன் வங்கிகடன் வட்டி விகிதங்களை 5ஆல்லது 6 சதவிகிதமாக நிர்ணயிக்கவும் வேண்டுகிறேன்.
உற்பத்தி திறனை மேம்படுத்த, சமீபத்திய தொழில்நுட்ப இயந்திரங்களின் இறக்குமதிக்கான அனைத்து வரிகளும் விலக்கு அளிக்கப்படவும் வலியுறுத்துகிறேன். சிறு,குறு மற்றும் நடுத்தர துறைக்கான என்.பி.ஏவின் 90 நாள் விதிமுறைகளை 180 நாட்களாக அதிகப்படுத்தவும் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.