இந்தியா

ஜனநாயகத்தையும் வளர்ச்சியையும் வலுப்படுத்த மாலத்தீவுடன் பங்களிப்பு தொடரும்: பிரதமர் மோடி 

செய்திப்பிரிவு

ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும் வலுப்படுத்த மாலத்தீவுடன் பங்களிப்பு தொடரும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மாலத்தீவின் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியும், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமத் சோலிஹும் இன்று காணொலிக் காட்சி மூலம் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மாலத்தீவுகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கடலோரக் காவல்படைக் கப்பல் காமியாப், ரூபே அட்டை அறிமுகம், எல்இடி விளக்குகளைப் பயன்படுத்தி மாலேயில் ஒளியூட்டியது, உயர் சிறப்பு கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், மீன் பதப்படுத்தும் திட்டங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

அதிபர் பதவியில் ஓராண்டை நிறைவு செய்துள்ள சோலிஹை வாழ்த்திய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:

''இந்தியா-மாலத்தீவு நட்புறவில் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்கது. முதலில் அண்டை நாடுகள் எனும் இந்தியாவின் கொள்கையும், முதலில் இந்தியா என்ற மாலத்தீவின் கொள்கையும் அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.

அதிவேகமாக இடைமறிக்கும் திறன் கொண்ட கடலோரக் காவல் படையின் காமியாப், மாலத்தீவின் கடல்சார் பாதுகாப்பை விரிவுபடுத்தவும், மீன் வளப் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும்.

இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகளின் முக்கிய அம்சமாக இருப்பது மக்களுக்கு இடையேயான தொடர்புதான். இந்தச் சூழலில், மாலத்தீவில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாகி உள்ளது. இந்த வாரம் டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து 3 நேரடி விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. ரூபே அட்டை மூலம் பணம் செலுத்தும் நடைமுறை தொடங்கப்பட்டிருப்பதால் மாலத்தீவுகளுக்கு இந்தியர்களின் பயணம் மேலும் எளிதாகும்.

ஹுல்ஹுல்மாலேயில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கிரிக்கெட் விளையாட்டரங்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 34 தீவுகளில் குடிநீர் மற்றும் துப்புரவுத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும் வலுப்படுத்த மாலத்தீவுடன் பங்களிப்பு தொடரும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை இரு நாடுகளும் விரிவுபடுத்தும்''.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

SCROLL FOR NEXT