காஷ்மீரில் பனிச்சரிவு ஏற்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலி

ஐஏஎன்எஸ்

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவினால் 4 ராணுவ வீரர்கள் பலியானதாக ராணுவம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

வடக்கு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பனிச்சரிவு ஏற்பட்ட இரு சம்பவங்களில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான தங்தார் செக்டர் கடும் பனிப்பொழிவைச் சந்தித்து வருகிறது. இங்குள்ள ஒரு ராணுவ நிலை பனிச்சரிவில் சிக்கியது. இதில் 3 வீரர்கள் பலியாகினர்.

மற்றொரு சம்பவத்தில், குரேஸ் செக்டரில் நேற்றிரவு ஒரு ராணுவக் குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தது. இக்குழுவினர் திடீரென வீசிய பனிப்புயலில் சிக்கினர். இதில் ஒரு ராணுவ நபர் பலியானார்.

ராணுவ நிலைகள் அருகே எப்போதும் மருத்துவக் குழுக்கள் மீட்புப் பணி மற்றும் உதவிகளைச் செய்து வருகின்றன. இவர்களின் சிறந்த ஒத்துழைப்பு இருந்தபோதிலும், நான்கு வீரர்கள் உயிரிழந்தனர்.

இரண்டு சம்பவங்களிலும் மீட்புப் பணியில் ஈடுபட்ட குழுக்கள் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் கண்டுபிடித்து மீட்டெடுத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT