உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம் 
இந்தியா

சபரிமலையில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

பிடிஐ

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைந்து சாமி தரிசனம் செய்ய போலீஸ் பாதுகாப்பு அளிக்க, கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி பெண் ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

சபரிமலையில் கடந்த வாரம் திருப்தி தேசாய் வந்தபோது, உடன் வந்த கேரளாவைச் சேர்ந்த பிந்து அம்மணி மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடிக்கப்பட்டது. வழக்கறிஞரும், சட்டக்கல்லூரிப் பேராசிரியருமான பிந்து சார்பில் மூத்த வழக்கறிஞர் கோலின் கோன்சாலவேஸ் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அனைத்து வயது பெண்களும் சென்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2018, செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவில் கடந்த மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடை விதிக்கவில்லை.

இந்தத் தீர்ப்பையடுத்து, பெண் ஆர்வலர் திருப்தி தேசாய், பிந்து அம்மணி உள்பட சில பெண் ஆர்வலர்கள் கடந்த வாரம் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். கொச்சி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கேட்டபோது போலீஸார் பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டார்கள். மேலும், அங்கு பிந்து அம்மணி மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடிக்கப்பட்டுத் தாக்கப்பட்டார்.

இதையடுத்து சபரிமலைக்குச் செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் போதுமான பாதுகாப்பை போலீஸார் வழங்கிடக் கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி பிந்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.காவே, சூர்ய காந்த் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் ஆர்வலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோலின் கோன்சால்வேஸ் ஆஜரானார்.

அப்போது வழக்கறிஞர் கோன்சால்வேஸ் வாதிடுகையில், "உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதியளித்தது. ஆனால், சபரிமலைக்குப் பெண்கள் சென்றால் தடுக்கப்படுகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுவரக் கோரி கிண்டல் செய்கிறார்கள். ஆதலால், பெண்களைச் சபரிமலைக்கு அனுமதிக்கக் கோரி உத்தரவிட வேண்டும்" எனக் கோரினார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, "இந்த மனுவை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், இப்போது விசாரிக்கவில்லை. அடுத்த வாரம் பட்டியலிடப்படும். அப்போது விசாரிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT