தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அனுபவத்தையும், பயனையும் அறிய பாஜகவுக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டதா என்று பாஜகவை சிவசேனா விமர்சித்துள்ளது.
என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் மராத்திய சேனலுக்கு அளித்த பேட்டியில், "தன்னை பிரதமர் மோடி சேர்ந்து பணியாற்றலாம் எனக் கூறி அழைத்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். தனிப்பட்டரீதியாக நட்பு தொடரட்டும். ஆனால் அரசியல்ரீதியாக இருவருக்கும் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. ஆதலால், சாத்தியமில்லை" என்று நிராகரித்துவிட்டேன் எனத் தெரிவித்தார்.
சரத் பவாரின் இந்த உரையாடலைக் குறிப்பிட்டு சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வின் தலையங்கத்தில் பாஜகவை விமர்சித்து எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின்போது என்சிபி கட்சியை (மோஸ்ட் கரப்ட் பார்ட்டி) அதிகமான ஊழல் செய்த கட்சி என்று பிரதமர் மோடி விமர்சித்தார். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் சரத் பவார் என்ன பங்களிப்பு செய்துள்ளார் என்று அமித் ஷா விமர்சித்தார்.
ஆனால், எந்தப் பலனை எதிர்பார்த்து பாஜக, சரத் பவாரிடம் மீண்டும் கூட்டணி அமைக்க முயன்றது.
சரத் பவாரிடம் 55 எம்எல்ஏக்களுக்கும் குறைவாகவே இருந்தார்கள். ஆனால், அப்போது அவர்களிடம் நட்பு பாராட்டவில்லை. பாஜகவின் நோக்கம் அனைத்தும் சிவசேனாவை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க வேண்டும், உத்தவ் தாக்கரேவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது.
பாஜகவின் பாதங்கள் அரசியலில் மீண்டும் இடறினால், வீழ்ந்துவிடும்.
என்சிபி தலைவர் சரத் பவாரின் பயனையும், அனுபவத்தையும் அறிவதற்கு பாஜகவுக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டதா? 55 இடங்களுக்குள் வென்றபோது என்சிபியின் ஆதரவு அப்போது தேவைப்படவில்லையா?
மக்களவைத் தேர்தல் முடிந்த பின், என்சிபி தலைவர் பிரபுல் படேலுக்கும் தீவிரவாதி ஒருவருக்கும் நில விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. சரத் பவாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்கும் சூழல் பாஜவுக்கு உருவானபோதே அதனுடைய கறைபடிந்த செயல்பாடுகள் தொடங்கிவிட்டன.
சரத் பவாரைப் போல தொழிலதிபர் ராகுல் பஜாஜ், அமித் ஷா மேடையில் இருக்கும்போதே இந்த ஆட்சியில் பேச்சு சுதந்திரம் இல்லை, அச்சத்துடன் வாழ்கிறோம் என்று தெரிவித்தார். மற்ற மாநிலங்களைக் காட்டிலும், மகாராஷ்டிராவில் உள்ள மக்கள்தான் துணிச்சலுடன், பல்வேறு அனுபவத்துடன் வாழ்கிறார்கள். இது இங்கு மட்டும்தான் நடக்கும்''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.