உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை நிறுத்தி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மேலும் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொகுதி வரையறை, இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே தொடரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.
இதனிடையே டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை நிறுத்தி வைக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.