தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ள நிலையில், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 7,000 புள்ளிகளைக் கடந்து, புதிய உச்சத்தைத் தொட்டது.
இன்றைய பங்கு வர்த்தகத்தில், பிற்பகல் 2.45 மணியளவில் நிஃப்டி 154 புள்ளிகள் உயர்ந்து 7,012.80 ஆக இருந்தது.
அதேவேளையில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 542.48 புள்ளிகள் 23,536.71 என்ற உச்சத்தில் இருந்தது.
பின்னர், மும்பை பங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 556.77 புள்ளிகள் உயர்ந்து 23,551 ஆக இருந்தது. நிஃப்டி 155.45 புள்ளிகள் உயர்ந்து 7,014.25 என்ற உச்சத்தில் இருந்தது.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியளவில் நிறைவடைகிறது. இதன் தொடர்ச்சியாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அடுத்தடுத்தும் வெளியாகவுள்ளது.
இதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடையே ஆர்வம் நிலவி வருவதே இந்தப் புதிய எழுச்சிக்குக் காரணம் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அன்னிய முதலீடும் முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.
குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத் துறை, வங்கி உள்ளிட்ட பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அல்ட்ரா சிமெண்ட்ஸ், கோல் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், ஐடிசி, கெயில், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டார் கார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி., எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, மாருது சுசுகி, டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி மற்றும் பெல் ஆகிய நிறுவனங்கள் நிஃப்டி எழுச்சியால் பலனடைந்துள்ளன.