ரூ.3,300 கோடி ஹவாலா மோசடி வழக்கின் ஒரு பகுதி யாக, ரூ.170 கோடி நிதி பெற்றது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி ரசீதுகள் சமர்ப்பித்தது மற்றும் ஹவாலா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக அடிப்படை கட்டுமானத் துறையின் முன்னணி தொழில் நிறுவனங்களில் வருமான வரித் துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது.
டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஈரோடு, புனே, ஆக்ரா மற்றும் கோவாவில் உள்ள 42 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஹவாலா முகவர்கள் இடையே தொடர்பு இருப்பதும் போலி ஒப்பந்தங்கள் மற்றும் ரசீதுகள் மூலம் ரூ.3,300 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியது. இதில் ஹைதராபாத்தை சேர்ந்த ‘மேகா இன்ஃப்ராஸ்டிரக்சர் அண்டு இன்ஜினீயரிங்’ என்ற நிறுவனம் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.170 கோடி நிதி அளித்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலரும் ஆந்திராவை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றும் விசாரணை வளையத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.