பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்த (இடமிருந்து) மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மெக்வால், அமித் ஷா, பிரகலாத் ஜோஷி, மற்றும் ஜிதேந்திர சிங். படம்: பிடிஐ 
இந்தியா

‘370-வது பிரிவு ரத்து முயற்சி போல குடியுரிமை மசோதா முக்கியமானது’

செய்திப்பிரிவு

பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “நாடாளுமன்றத்தில் வரும் நாட்களில் முக்கிய மசோதாக்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. அவையில் பாஜக எம்.பி.க்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாதது குறித்து பிரதமர் மோடி பலமுறை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். என்றாலும் இப்பிரச்சினை நீடிக்கிறது. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை போல குடியுரிமை மசோதாவை நிறைவேற்றுவதும் முக்கியமானது.

மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்யவுள்ளார். அப்போது பாஜக எம்.பி.க்கள் அதிக எண்ணிக்கையில் அவையில் இருக்க வேண்டும்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, அகதிகளாக இந்தியா வந்துள்ள முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை அளிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. பாஜக எப்போதும் நாட்டையும் அதன் மக்களையும் ஒருங்கிணைக்கவே பாடுபடுகிறது.

அண்டை நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. எனவே அங்கு முஸ்லிம் அல்லாதோர் தான் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். முஸ்லிம்கள் அல்ல” என்றார்.

- பிடிஐ

SCROLL FOR NEXT