மக்களவையில் நேற்று முன் தினம் வரிவிதிப்பு சட்ட (திருத்த) மசோதா மீதான விவாதத் தின்போது, பேசிய மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பலமிழந்தவர் என்று பேசினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று நடை பெற்ற பூஜ்ய நேரத்தின்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வெங்காயத் தின் விலை உயர்வு குறித்து பேசத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நிர்மலா சீதாராமன் குறித்து நாகரீகமற்ற வகையில் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றார்.
அப்போது பூனம் மகாஜன் பேசும்போது, “நாகரீகமற்ற வார்த்தைகளைப் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்புக் கேட்க வேண்டும். அதற்கு முன்னால் அவர் பேச அனுமதிக்கக்கூடாது” என்றார். அப்போது பாஜக எம்.பி.க் களும், சவுத்ரிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் நீடித்தது.
இதனிடையே, வெங்காய விலை உயர்வைக் கண்டித்தும், அதைத் தடுக்க முடியாத மத்திய அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
- பிடிஐ