வங்கியில் கோடிக்கணக்கில் நாம் டெபாசிட் செய்திருந்தாலும், அந்தப் பணம் காணாமல் போனாலோ அல்லது வங்கி திவாலானாலோ, வங்கியில் பணம் தரமுடியாத சூழல் ஏற்பட்டாலோ, வங்கி உரிமம் ரத்தானாலோ வாடிக்கையாளர் பணத்துக்கு காப்பீடாக அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரைதான் பெற முடியும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதிக்கழகம் (டிஐசிஜிசி) இந்தத் தகவலை அளித்துள்ளது.
இதன்படி சேமிப்புக் கணக்கு, நிரந்த வைப்புத் தொகை, நடப்புக் கணக்கு, ரெக்கரிங் டெபாசிட் ஆகியவற்றில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்திருந்தாலும் வங்கியால் பணம் கொடுக்க இயலாமல் போகும்போது டெபாசிட்தாரர்களுக்கு இழப்பீடாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
தகவல் அறியும்உரிமைச் சட்டம் மூலம் பிடிஐ செய்தி நிறுவனம் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதிக்கழகம் (டிஐசிஜிசி) வெளியிட்ட தகவலில், ''டிஐசிஜிசி சட்டம் 1961, பிரிவு 16(1)ன் கீழ், ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தைக் கொடுக்க இயலாமல் போகும்போது, அவர்களுக்கு டிஐசிஜிசி பணத்தை வழங்க கடமைப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு டெபாசிட்தாரருக்கும் அவர்கள் செய்துள்ள டெபாசிட் அடிப்படையில் அவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம், வட்டி ஆகியவற்றின் அடிப்படையில் ரூ.1 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மகாராஷ்டிராவில் சமீபத்தில் பிஎம்சி வங்கி மோசடியையடுத்து, டெபாசிட்தாரர்களின் காப்பீடு தொகையை அதிகரிக்க ஏதேனும் வாய்ப்பு, அல்லது திட்டம் பரிசீலனையில் இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு தங்களின் இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான வர்த்தக வங்கி, இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள், உள்ளூர் வங்கிகள், மண்டல கிராம வங்கிகள் ஆகியவற்றுக்கும் டிஐசிஜிசி அமைப்பு காப்பீடு பொருந்தும். அதேபோல அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும், டிஐசிஜிசி சட்டம் பிரிவு ( 2)ன் கீழ் வைப்புத்தொகை காப்பீடு திட்டத்துக்குள் வந்துவிடும்.
இதன்படி, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வங்கியின் உரிமம் ரத்து செய்தல், பணம் இல்லா சூழல் உருவாதல், இணைத்தல், மறுசீரமைப்பு செய்தல் போன்றவை நடைமுறைக்கு வரும்போது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் டெபாசிட்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
ஆக, வாடிக்கையாளர் கோடிக்கணக்கில் வங்கியில் டெபாசிட் செய்தாலும், நடுத்தர குடும்பத்தினர், ஊதியம் பெறுபவர் தனது வாழ்நாளில் சேர்த்த பணத்தை வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும் அதற்கான காப்பீடு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால், அரசு வங்கிகளில் நடக்கும் மோசடிகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதங்களில் ரூ.95 ஆயிரத்து 700 கோடி மோசடி நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் படி, பொதுத்துறை வங்கிகளின் 2019, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2019, செப்டம்பர் 30-ம் தேதி வரை 5 ஆயிரத்து 743 மோசடிகள் நடந்துள்ளன. இந்த மோசடியின் மதிப்பு ரூ.95 ஆயிரத்து 760 கோடியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.