ஜார்க்கண்ட் மாநிலத்தல் வானிலை மாறிய அளவிற்கு முதல்வர்களை காங்கிரஸ் கூட்டணி மாற்றியதாக பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மற்ற நான்கு கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) உடன் இணைந்து காங்கிரஸ் தேர்தலைச் சந்திக்கிறன. மாநிலத்தில் மொத்தமுள்ள 81 இடங்களில் காங்கிரஸ் 31 இடங்களில் போட்டியிடுகிறது. ஜே.எம்.எம் 43 மற்றும் ஆர்.ஜே.டி மற்ற ஏழு இடங்களிலும் போட்டியிடுகிறது.
ஆளும் பாஜகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
‘‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் வானிலை கூட அந்த அளவிற்கு மாறி இருக்காது. காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சிக்காலத்தில் அந்த அளவிற்கு முதல்வர்கள் மாற்றப்பட்டனர்.
தங்கள் சொந்த சுயநலத்துக்காக அந்த கட்சிகள் முதல்வர்களை தொடர்ந்து மாற்றி வந்தனர். பாஜக ஆட்சி அமைத்த பிறகே ஜார்க்கண்டில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. வளர்ச்சியும், மேம்பாடும் அடைகிறது.’’
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.