விக்ரம் லேண்டரின் மோதிய பகுதி கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆராய, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ம்தேதி விண்ணில் செலுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதிதிட்டமிட்டபடி லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் கடைசிநிமிடத்தில் பாதை மாறி வேகமாகசென்று நிலவில் விழுந்தது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேகமாகச் சென்று நிலவின் தரையில் லேண்டர் மோதியதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவை வெற்றி கரமாகச் சுற்றிவந்து சிறப்பான முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்ட ஆய்வில் நிலவு தொடர்பான பல்வேறு அரிய தகவல்கள் மற்றும் படங்களை ஆர்பிட்டர் அனுப்பி வருகிறது.
எனினும் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனதற்கு ஆய்வு செய்யஇஸ்ரோவின் திரவ உந்துசக்தி எரிபொருள் ஆய்வு மைய இயக்குநர் வி.நாராயணன் தலைமையில் விஞ்ஞானிகள் அடங்கிய தேசிய உயர்மட்டஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, ஆர்பிட்டர் அனுப்பிய நிலவின் மேற்பரப்பு புகைப்படங்கள், திட்ட செயலாக்கப் பணி மதிப்பீடு மற்றும் நாசா உட்பட இதர விண்வெளி மையங்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டு விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விக்ரம் லேண்டரின் மோதிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் ஆர்பிட்டர் கேமிரா, விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க முயற்சித்தற்கு முன்பும், நிலவில் மோதிய பின்பும் தரை பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை படம் பிடித்துள்ளது.
இதுதொடர்பான புகைப்படத்தில் நீலம் மற்றும் பச்சை நிற புள்ளி குறியீடுகளால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன. இவற்றில் பச்சை புள்ளிகள் விக்ரம் லேண்டரின் உடைந்த பகுதிகளை அடையாளம் காட்டுகிறது.
நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் மோதியதில் தென்துருவ நிலவின் தரையில் மண்பகுதி விலகி இருப்பது நீல நிற புள்ளிகளால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளது.