மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் : படம் ஏஎன்ஐ 
இந்தியா

ரூ.40 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை: அனந்த் கருத்துக்கு பட்னாவிஸ் மறுப்பு

பிடிஐ

பட்னாவிஸ் ரூ.40 கோடியை மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவே 2-வது முறையாக மகாராஷ்டிர முதல்வராகப் பதவி ஏற்றார். இது திட்டமிட்ட நாடகம் என்று பாஜக எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே கூறினார். இதை பட்னாவிஸ் மறுத்துள்ளார்.

பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் ஹெக்டே கர்நாடகத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதில்," மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். தெரிந்துதான் திட்டமிட்டு ஒரு நாடகம் நடத்தினோம்.

ஆளுநரும் அட்ஜஸ்ட் செய்தார். முதல்வரின் கீழ் மத்திய அரசின் ரூ.40 ஆயிரம் கோடி நிதி இருக்கிறது. அதை அடுத்துவரும் முதல்வர், காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கட்சிகள் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தமாட்டார்கள் என்பது தெரியும்.

ஆதலால், அதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவே பட்னாவிஸ் 2-வது முறையாகப் பதவி ஏற்றார். பணத்தை மத்திய அரசுக்கு அனுப்பிய பின் அவர் பதவி விலகினார்" எனத் தெரிவித்தார்.

பாஜக எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே பேசிய கருத்தை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார். மும்பையில் பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " நான் 2-வது முறையாக பதவியில் இருந்த நேரத்தில் எந்தவிதமான பணமும் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை. காபந்து முதல்வராக இருக்கும் போது எந்தவிதமான கொள்கை முடிவும் எடுக்கவில்லை.

ரூ.40 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பிவிட்டதாகச் சிலர் கூறினால் அது தவறானது. எந்தவிதமான சம்பவமும் அவ்வாறு நடக்கவில்லை. புல்லட் ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை நிலம் கையகப்படுத்துவதில் மகாராஷ்டிரா அரசுக்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லை. மத்திய அரசும் எந்தவிதமான பணத்தையும் கேட்கவில்லை. நானும் எந்தவிதமான பணத்தையும் அனுப்பவில்லை" எனத் தெரிவித்தார்.

அவ்வாறு செய்தால் துரோகம்: சிவசேனா

தேவேந்திர பட்னாவிஸ் ரூ.40 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பியதாக வெளியான செய்தி குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், " மகாராஷ்டிராவில் இருந்து ரூ.40 ஆயிரம் கோடியை பட்னாவிஸ் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பி இருந்தால் அது மக்களுக்குச் செய்யும் துரோகம். பாஜகவும், பட்னாவிஸும் மக்கள் முன் குற்றவாளியாக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT