இந்தியா

தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதற்கான முக்கிய கோப்பு சிக்கியது

ஐஏஎன்எஸ்

1993ல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவ முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதற்கான முக்கிய கோப்பு, உளவுத் துறைக்கு கிடைத்திருப்பதாக பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த பத்திரிகை, தாவூத் இப்ராஹிமின் சமீபத்திய படத்தையும் வெளியிட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் ஆகியோர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வரும் 23-24-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தங்களிடம் இருக்கும் கோப்பை பாகிஸ்தான் ஆலோசனைக் குழுவிடம், அஜித் தோவல் அளிக்க இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலின்படி, தாவூத் இப்ராஹிம், மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் கராச்சி நகரில் வசிப்பதாகவும். இவர்கள் அவ்வப்போது துபாய்க்கு பயணித்து வருவதற்கான ஆவணங்கள் உளவுத் துறைக்கு சிக்கி இருப்பதாகவும் மற்றும் பாஸ்போர்ட்டுக்கு ஆதாரமாக அவரது மனைவி முஜாபீன் பெயரிலான தொலைபேசி கட்டணம் ஆவணம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாவூத் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாகவும் அவரை ஒப்படைக்கும்படியும் உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கான தக்க கோப்புகள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT