இந்தியா

கிளிசரின் போட்டுக் கொண்டு அழுவதற்கு அவசியமில்லை: முன்னாள் முதல்வர் குமாரசாமி விளக்கம்

இரா.வினோத்

நான் சினிமா நடிகர்களைப் போல ‘கிளிசரின்’ போட்டு அழ வேண்டிய அவசியம் இல்லை என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் 5-ம் தேதி 15 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க் கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆகியவை தனித்தனியே கள மிறங்கியுள்ளதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனி டையே அண்மையில் மண்டியா வில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழுது வாக்கு சேகரித்தார். இதையடுத்து, குமாரசாமி கிளிசரின் போட்டு நீலி கண்ணீர் வடிப்பதாக பாஜகவினர் விமர்சித்தனர்.

இதுகுறித்து மைசூருவில் நேற்று குமாரசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

நான் மிகவும் உணர்வுப் பூர்வமானவன் என்பது என்னை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரி யும். ஏழைகள் படும் கஷ்டத்தை கண்டால்கூட என் கண்கள் கலங்கி விடும். உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைப் பேசினால் கண்ணீர் விட்டு அழுதுவிடுவேன். ஆனால் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்ட சில பாஜகவினர் என்னை மோசமாக விமர்சித்து உள்ளனர்.

எனக்கு சினிமா நடிகர்களைப் போல கிளிசரின் போட்டுக் கொண்டு அழ வேண்டிய அவசியம் இல்லை. நாடகம் போட்டு ஏமாற்ற வேண்டிய தேவையும் இல்லை. சதானந்த கவுடா நாடகமாடும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் எல்லாவற்றையும் நடிப்பாக பார்க்கிறார். பாஜகவினருக்கு மனிதநேயம் இல்லாததால் அவர்களுக்கு கண்ணீர் வருவ தில்லை. நாட்டில் ஏழைகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண் திறந்து பார்ப்பதில்லை. இதயத்தில் ஈரம் இருந்தால் தானாக கண்ணீர் வரும்.

இவ்வாறு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT