மத்தியில் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரானார். இதையடுத்து கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த மே 30-ம் தேதி 2-வது முறையாக நரேநேதிர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். அவர் தலைமையிலான 2-வது அரசு நேற்றுடன் 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது.
இதைக் குறிக்கும் வகையில், ‘6 மன்த்ஸ் ஆப் இந்தியா பர்ஸ்ட்’ என்ற ஹேஷ்டேக் மூலம் பிரதமர் மோடி ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ‘அனைவரும் இணைவோம், அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவரையும் நம்புவோம்’ என்ற குறிக்கோளின்படியும் 130 கோடி இந்தியர்களின் ஆசியுடனும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. சமூக நீதி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒற்றுமை அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் இன்னும் அதிக திட்டங்களை நிறைவேற்ற அரசு விரும்புகிறது. அப்போதுதான் வளமான, தொடர்ந்து வளரும் புதிய இந்தியாவை உருவாக்க முடியும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். - பிடிஐ