மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமின் (எம்.ஐ.எம்) கட்சியின் துணைத் தலைவர் அக்பருதீன் ஒவைசியை கொல்ல நடந்த சதியை ஹைதராபாத் பெங்களூர் போலீஸார் முறியடித்தனர். இது தொடர்பாக கூலிப் படையினர் 4 பேரை பெங்களூர் போலீஸார் கைது செய்தனர்.
ரகசிய தகவலின் பேரில், ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில், கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள ஹிந்துபூர் நகரில் இவர்கள் வழிமறிக்கப்பட்டனர். கர்நாடக - ஆந்திர கூட்டுப் படை போலீஸார் இவர்களை வழிமறித்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அப்போது தப்பிச்செல்ல முயன்ற கூலிப்படையின் தலைவன் கே.கிரி உள்ளிட்ட இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் அந்த இருவரும் காயம் அடைந்தனர். நால்வரையும் கர்நாடக போலீஸார் கைது செய்து பெங்களூர் கொண்டுசென்றனர்.
இந்த நால்வரும் எம்.ஐ.எம். தலைவர் அக்பருதீன் ஒவைசியை கொலை செய்வதற்காக அமர்த்தப்பட்ட கூலிப்படை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இவர்களை கூலிக்கு அமர்த்தியவர்கள் யார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பான விவரங்களை பெங்களூர் போலீஸாரிடம் இருந்து அறிந்துகொள்ள முயன்று வருவதாக ஹைதராபாத் போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன் கடந்த 2011-ல் ஹைதராபாத்தில் அக்பருதீன் ஒவைசி கொலை முயற்சியில் இருந்து தப்பினார். அப்போது அவருக்கு கத்திக்குத்து காயமும் துப்பாக்கி குண்டு காயமும் ஏற்பட்டது. அப்போது குண்டர்களை நோக்கி, எம்.ஐ.எம். எம்எல்ஏ அகமது பலாலாவின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு அக்பருதீனை காப்பாற்றினார். இதில் குண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
அண்மையில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில், ஹைதராபாத் புறநகர் பகுதியான சந்திரயாங்குட்டா தொகுதியில் இருந்து அக்பருதீன் ஒவைசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர், எம்.ஐ.எம். தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியின் தம்பி ஆவார்.