ஹைதராபாத்தில் கறுப்புத் துணி கட்டி மவுனப் போராட்டத்தில் ஈடுபட்ட தெலங்கானா மாநில பாஜக மகிளா மோர்ச்சா அமைப்பினர் | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

ஹைதராபாத் கொடூரம்: பாஜக பெண்கள் அணி வாயில் கறுப்புத்துணி கட்டி மவுனப் போராட்டம்

ஏஎன்ஐ

தெலங்கானாவில் அடுத்தடுத்த கூட்டுப் பலாத்கார கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் பாஜக மகளிர் அணியினர் வாயில் கறுப்புத்துணி கட்டி மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் ஹைதராபாத் பெங்களூர் நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே பெண் கால்நடைமருத்துவர் ஒருவரின் எரிந்த உடலை நேற்றுமுன்தினம் போலீஸார் கண்டெடுத்தனர். இதற்கு அடுத்தநாளே மற்றுமொரு சம்பவத்தில் கிட்டத்தட்ட அதே பகுதியில் இன்னொரு பெண்ணின் எரிந்த உடலை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். இப்பெண்ணும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொல்லப்படும் சம்பவங்கள் நாட்டையே உலுக்கிவருகின்றன. இந்நிலையில் இதற்கு கட்சிப்பாகுபாடின்றி அனைத்துத் தலைவர்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தேசிய மகளிர் ஆணையம் கால்நடை மருத்துவரைக் கொன்றவர்களைப் பற்றி குறிப்பிடும்போது ''பெண்கள் தனியே வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெரு ஓநாய்கள்'' எனத் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 4 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் தெலங்கானா மாநில பாஜக மகளிர் அணியினர் வாயில் கறுப்புத்துணி கட்டி மவுனப் போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்தில் பங்கேற்ற தெலங்கானா மாநில பாஜக மகளிர் அணியின் தலைவர் அகுலா விஜயா கூறியதாவது:

''தெலங்கானாவில் ஒரு சதவீதம்கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இம்மாநிலத்தில் பெண்கள் தாக்கப்படும் சம்பவம் ஏராளமாக நடந்தேறி உள்ளன. ஆனால் தற்போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பற்றி அரசாங்கத்திற்கு அக்கறையே இல்லை.

இவ்வாறு அகுலா விஜயா தெரிவித்தார்.

மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ராமச்சந்திர ராவ் கூறுகையில், ''தெலங்கானாவில் ஓரிரு தினங்களிலேயே இரண்டு கூட்டுப் பலாத்கார கொலைகள் நடந்திருப்பது முற்றிலும் துரதிஷ்டவசமானது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை மாநில அரசு கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். 24 மணிநேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது ஆகும்.'' என்றார்.

SCROLL FOR NEXT