அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்து விட்டதால் பாபர் மசூதி இடிப்பு தின நிகழ்ச்சியை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என ராமஜென்ம பூமி நியாஸ் மஞ்ச் தலைவர் நிருத்திய கோபால் தாஸ் கூறினார்.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக் குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி மத்திய வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்கில், சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. பிரச்சினைக்குரிய இடம் ராம் லல்லா தரப்புக்கே சொந்தம் என்றும் அங்கு ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது.
அதேநேரம், பாபர் மசூதி கட்டுவதற்காக முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் வேறு இடத்தில் ஒதுக்க வேண்டும் எனவும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராம்ஜென்ம பூமி நியாஸ் மஞ்ச் தலைவர் நிருத்திய கோபால் தாஸ் கூறுகையில் ‘‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதி அன்று அயோத்தியில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வழிபாடு நடைபெறும்.
ஆனால் அயோத்தி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அங்கு விரைவில் ராமர் கோயில் கட்டப்படவுள்ளது. எனவே இனிமேலும் டிசம்பர் -6ம் தேதி நிகழ்ச்சி நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. அன்றைய தினம் உறுதி ஏற்பு எதுவும் இருக்காது. அதேசமயம் சமூகநல்லிணக்கத்தை வலியுறுத்தி அன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் நடைபெறும்’’ எனக் கூறினார்.