மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசு 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 169 வாக்குகள் இருந்ததால், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மை பெற்றதாகச் சபாநாயகர் திலீப் பாட்டீல் அறிவித்தார்
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததாலும், ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வராததாலும் அங்கு தலைவர் ஆட்சி அமலில்இருந்தது.
சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கின. ஆனால், என்சிபி தலைவர் அஜித் பவார் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்து முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பட்னாவி்ஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் இணைந்து அமைத்த மகா விகாஸ் கூட்டணி அரசு ஆட்சி அமைத்தது. முதல்வராக சிவேசனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுள்ளார். உத்தவ் தாக்கரேயுடன் சேர்ந்து என்சிபி, காங்கிரஸ், சிவேசனா சார்பில் தலா 2 பேர் அமைச்சர்களாகப் பதவிஏற்றனர்.
இந்தச்சூழலில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்தது. இடைக்கால சபாநாயகராக என்சிபியை சேர்ந்த திலீப் பாட்டீல் தேர்வு செய்யப்பட்டார்.
பிற்பகலில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்க வந்தும் சட்டப்பேரவைத் தொடங்கியது. பாஜக எதிர்க்கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் எழுந்து பேசுகையில், " சட்டப்பேரவை விதிமுறைகளுக்கு மாறாகக் கூட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பதவி ஏற்றும் அரசியலமைப்பு விதிகளின்படி இல்லை" எனக் குற்றம்சாட்டினார்.
ஆனால் இடைக்கால சபாநாயகர் திலீப் பாட்டீல், பட்னாவிஸ் குற்றச்சாட்டை நிராகரித்து, ஆளுநர் அனுமதிவழங்கியபடி, விதிமுறைகளின்படிதான் அவை கூட்டப்பட்டு நடந்து வருகிறது எனத் தெரிவித்தார்
சபாநாயகர் திலிப் பாட்டீல் கருத்துக்கு பட்னாவிஸ் மறுப்புத் தெரிவித்துப் பேசுகையில், " இடைக்கால சபாநாயகரை யாரும் ஒருபோதும் இந்தியாவில் மாற்றியது இல்லை. எதற்காக பாஜக சார்பில் அமர்த்தப்பட்ட சபாநாயகர் காளிதாஸ் கோலம்கரை நீக்கிவிட்டு உங்களை அமர்த்தினார்கள். மகாராஷ்டிரா வரலாற்றிலேயே சபாநாயகரைத் தேர்வு செய்யாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது இல்லை. எதற்காக இந்த அரசு அச்சப்படுகிறது" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குச் சபாநாயகர் திலிப் பாட்டீல், " யாரை நீக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு அமைச்சரவைக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது, அடுத்த சபாநாயகரை அமர்த்தவும் அதிகாரம் உள்ளது" எனத் தெரிவித்தார்
அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் சவான் எழுந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதைத் தொடர்ந்து என்சிபி சார்பில் நவாப் மாலிக், சிவசேனா சார்பில் சுனில் பிரபு ஆகியோர் கோரினர். இதனால் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டு கோஷமிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
அதன்பின் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையை விட்டு வெளியேறினார். பாஜக மூத்த தலைவர் பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், " இந்த அவை சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகவும் கூட்டப்பட்டுள்ளது. சபாநாயகர் அமர்வு சட்டவிரோதமாக இருக்கிறது. இதுதொடர்பாக ஆளுநரைச் சந்தித்து மனு அளிப்போம். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ரத்து செய்யக் கோருவோம்" எனத்தெரிவித்தார்
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இடைக்கால சபாநாயகர் திலீப் பாட்டில் நடத்தினார். இதில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசுக்கு 169 எம்எல்ஏக்கள் இருக்கிறது என்று கூறி, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதாகச் சபாநாயகர் திலீப் பாட்டீல் அறிவித்தார்