கோப்புப் படம் 
இந்தியா

நிர்பயா நிதியில் சென்னையில் பெண்கள் நல மையங்கள்: மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் வலியுறுத்தல்

ஆர்.ஷபிமுன்னா

நிர்பயா நிதியில் சென்னையில் பெண்களுக்காக நல மையங்கள் அமைக்க மக்களவையில் வலியுறுத்தப்பட்டது. இதை திமுக எம்பியான தமிழச்சி தங்கப்பாண்டியன் பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பினார்.

தென்சென்னை தொகுதி எம்பியான தமிழச்சி தங்கப்பாண்டியன் மக்களவையில் பேசியதாவது:
பெண்கள், சமுதாயத்தில் மிகவும் மாறுபட்டவர்களாகவும், பன்முகத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பல வகையான பொறுப்புகள் மற்றும் ஆணாதிக்கத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

பெண்கள் தியாகம் செய்தே வாழ வேண்டும் என்று சமுதாயம் கண்மூடித்தனமாக அவர்களை கட்டாயப்படுத்தி உள்ளது. நான் ஒரு பெண்ணாக இருப்பதால், வீடு மற்றும் பணியிடத்தில் பெண்கள் படும்பாடு எவ்வளவு கடினம் என்பதையும், சில சமயங்களில் அது எவ்வளவு கொடூரமானது என்பதையும் அறிவேன்.

இந்த சூழ்நிலையில் பெண்கள் அதிக மன அழுத்தத்தையும், மனச்சோர்வையும் அடைகிறார்கள். இதனை அரசு தடுக்க முடியும்.
நிர்பயா நிதியத்தின் கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியை பயன்படுத்தி பெண்களுக்கான ஆலோசனை மையங்கள் அல்லது பெண்கள் நல மையங்களை அரசு நிறுவுகிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே, 43 லட்சம் பெண்கள் அடங்கிய சென்னையில் எனது தொகுதியான தென்சென்னை உள்ளிட்ட இடங்களில் மனநல மருத்துவர் மற்றும் உளவியல் ஆலோசகர் கொண்ட பெண்கள் நலவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT