பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் : கோப்புப்படம் 
இந்தியா

பிரக்யா தாக்கூரை உயிருடன் எரித்துவிடுவேன்: காங்.எம்எல்ஏ. சர்ச்சைப் பேச்சு

பிடிஐ

போபால் நகருக்குள் பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் நுழைந்தால் உயிருடன் எரித்துவிடுவேன் என்று மத்தியப்பிரதேச அரசின் காங்கிரஸ் எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக கமல்நாத் உள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பயோரியா தொகுதி எம்எல்ஏ கோவர்த்தன் டாங்கே என்பவர்தான் இந்த கருத்தைப் பேசியுள்ளார்.

மக்களவையில் நேற்று முன்தினம் பேசிய பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர், " மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதூராம் கோட்சேவை தேசபக்தர்" என்று பேசினார்.

இதற்கு அவையில் இருந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பாஜகவும் பிரக்யா தாக்கூர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, அவரை நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் இருந்து நீக்கியது. இந்நிலையில், தான் பேசிய கருத்துக்கு பிரக்யா தாக்கூர் மக்களவையில் இன்று மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், பிரக்யா தாக்கூர் கோட்சேவை தேசபக்தர் என்று பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போபால் அருகே பயோரியா நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்த்தன் டாங்கி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், " மகாத்மா காந்தியை கொலை செய்தவர்களை புகழந்துபேசுவதைக் காட்டிலும் நம்மை வேதனைப்படுத்துவது வேறு ஏதும் இருக்க முடியாது. நாம் பிரக்யா தாக்கூரின் உருவ பொம்மையை மட்டும் எரித்தால் போதாது, அவர் போபால் நகருக்குள் வந்தால் அவரையும் உயிருடன் எரித்துவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்

காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்த்தன் டாங்கேயின் பேச்சு சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. தன்னுடைய பேச்சுக்கு கோவர்த்தன் எம்எல்ஏ இன்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

கோவர்த்தன் நிருபர்களிடம் பேசுகையில், " நான் தவறுதலாக பிரக்யா தாக்கூர் பற்றி பேசிவிட்டேன். நான் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி நடந்து வருகிறேன். நான் சொல்வதெல்லாம் பிரக்யா தாக்கூர் இங்கு வந்தால் ராஜ்கார்க் மாவட்ட மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும். நான் பேசியதில் தவறு ஏற்பட்டுவிட்டது. அதற்கு மன்னிப்பு கோருகிறேன்" எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT