ஆந்திராவில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான வருமான உச்சவரம்பை ரூ.2.5 லட்சமாக அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர் களிடம் தகவல் தொடர்பு துறை அமைச்சர் நானி கூறியதாவது:
காப்பு சமூகத்தை சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இனி ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் நிதியுதவி வழங்க தீர்மானிக்கப் பட்டது. இதன்படி வரும் 5 ஆண்டு களில் ஒருவருக்கு ரூ. 75 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக ரூ. 1,101 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக அதிகரிக்கப்படும்.
இவர்களுக்கு அரிசிக்கான வெள்ளை நிற ரேஷன் அட்டை வழங்கப்படும். இதேபோன்று, 10 ஏக்கர் நன்செய், 25 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளவர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களாக கணக்கிடப் படும்.
‘நவசகம்’ என்ற கணக்கெடுப்பு மூலம், அரசுத் திட்ட பயனாளிகள் அனைவரையும் ஒன்றிணைப்பது, கடப்பா மாவட்டம், ஜம்முல மொடுகு பகுதியில் 3,200 ஏக்கர் பரப்பளவில் இரும்பு தொழிற் சாலை அமைப்பது எனவும் தீர் மானிக்கப்பட்டது.
இவ்வாறு அமைச்சர் நானி கூறினார்.
தமிழகத்தில் வறுமைக்கோட் டுக்கான உச்சவரம்பு துறைகள் மற்றும் திட்டங்கள் அடிப்படையில் வேறுபடுகிறது. சுகாதாரத் துறை யின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், சமூகநலத் துறையின் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திருமண உதவித் திட்டங்களுக்கு அதிகபட்ச வருவாய் வரம்பு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் என்றும், முதியோர் உதவித்தொகைக்கு ரூ.50 ஆயிரம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையை பொறுத்த வரை வறியவர்கள் என கண்டறியப் பட்ட 18 லட்சத்து 64 ஆயிரத்து 800 பேருக்கு அந்தியோதயா அன்னயோ ஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது.