ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கப் பிரிவு காத்திருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் இந்த வார்த்தையை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்த போது, அங்கு கார்த்தி சிதம்பரமும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கப் பிரிவு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார். ஆதலால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று துஷார் மேத்தா வாதிட்டார்.
துஷார் மேத்தா வாதிடும் போது, நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் இருந்தார். அப்போது நீதிபதி ஆர். பானுமதியைப் பார்த்துப் பேசிய துஷார் மேத்தா, "இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் பெற்று கார்த்தி சிதம்பரம் வெளியே இருக்கிறார். உயர் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீனை ரத்து செய்தால், அவரையும் கைது செய்ய அமலாக்கப் பிரிவு காத்திருக்கிறது. ஆனால், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் சில அம்சங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கார்த்தி வழக்குத் தொடர்ந்துள்ளார்" எனத் தெரிவித்தார்
துஷார் மேத்தா தன்னைப் பற்றி நீதிபதியிடம் தெரிவிப்பதைப் பார்த்த கார்த்தி சிதம்பரம், சிறிது நேரம் யாரையும் பார்க்காமல், எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமலும், நீதிபதியின் முகத்தைப் பார்க்காமலும் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.