மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், என்சிபி கூட்டணி அமைந்து ஆட்சி அமைக்க அரசியல் அனுபவமும், வலிமையும் நிறைந்த சரத் பவார் காரணம். அவர் வழிகாட்டி என்று சிவசேனா கட்சி புகழாரம் சூட்டியுள்ளது
இந்துத்துவா, தேசியவாதம் சிந்தனைகளை முன்னெடுத்து அரசியல் செய்துவரும் சிவசேனா கட்சி, மதச்சார்பின்மையைக் கையிலெடுத்து அரசியல் செய்யும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை அமைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக வந்த பாஜகவில் ஆட்சி அமைக்க முடியாத சூழலில், 60 எம்எல்ஏக்களுக்கும் குறைவாக வைத்திருக்கும் 3 கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. மகா விகாஸ் அகாதியின் சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இன்று மாலை பொறுப்பேற்க உள்ளார்.
சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் என்சிபி தலைவர் சரத் பவாருக்கு புகழாரம் சூட்டி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
''என்சிபி தலைவர் அஜித் பவார் பாஜக பக்கம் சென்றபோது, அவரிடம் பேசி மீண்டும் அவரின் முடிவை மாற்றச் செய்து, கூட்டணிக்கு அழைத்து வந்த பெருமை சரத் பவாரையே சாரும். மிகப்பெரிய அரசியல் நாடகத்தில், ஆட்ட நாயகனாக சரத் பவாரே திகழ்ந்தார்
சரத் பவாரின் முயற்சியில்தான் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி முன்னோக்கி நகர்ந்தது. பழுத்த அரசியல் அனுபவம், மராத்தியர்களின் வலிமை ஆகியவற்றால் கூட்டணிக்கும், எங்களுக்கும் வழிகாட்டியாக சரத் பவார் திகழ்ந்தார்.
தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்த பாஜகவால் ஆட்சியில் அமர முடியவில்லை. ஆனால் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு மகாராஷ்டிராவில் புதிய சூரியனை உதயமாக்கியுள்ளார் சரத் பவார்.
மாநிலத்தில் உள்ள மக்கள் மனதில் இருக்கும் மகிழ்ச்சி என்பது எதற்கு இணையானது என்றால், கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தேசத்துக்குச் சுதந்திரம் கிடைத்தது போன்ற உணர்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனா ஆட்சியில் அரசு இயந்திரம் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தப்படாது. எந்தக் கட்சியினர் மீதும் காழ்ப்புணர்ச்சியுடன், பழிவாங்கும் உணர்வுடன் நடக்காது.
அதேசமயம், மத்திய அரசுக்கு ஒருபோதும் சிவசேனா தலைவர் பணிந்து நடக்கமாட்டார். ஒருநேரத்தில் டெல்லியில் அரியணையில் ஆள்வோர்களுக்கு மண்டியிட்டு நாடு முழுவதும் உள்ள பல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், உத்தவ் தாக்கரே ஒருபோதும் டெல்லிக்கு அடிபணிய மாட்டார். அவர்களின் அழுத்தம், தந்திரங்களுக்கும் அஞ்சமாட்டார். ஒருபோதும் உத்தவ் தாக்கரே சுயமரியாதை, கவுரவத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டார். பொய் சொல்பவர்களுடன் சேரவும் மாட்டார்
தேவேந்திர பட்னாவிஸ் எங்கள் கூட்டணியைச் சபித்தார். 3 கால்கள் கொண்ட நாற்காலி நிற்காது, நிலைக்காது என்று பேசினார். அது அவரின் தவறான மதிப்பீடு. மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்திச் செல்வதில் 3 கட்சிகளுக்கும் எந்தவிதமான குழப்பமும் இல்லை’’.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.