பழுதுபார்க்கக் கொடுத்தத் தனது சைக்கிளை கடைக்காரரிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டி கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் தனது நோட்டு புத்தகத்தின் தாளிலேயே காவல்துறைக்கு அளித்த புகார் மனு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் விளையாட்டூரைச் சேர்ந்தவர் அபின். வயது 10. இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார்.
இந்நிலையில் மேப்பையூர் காவல் நிலையத்துக்கு 25.11.2019 தேதியிடப்பட்டு நோட்டு புத்தகத் தாளில் மலையாளத்தில் எழுதப்பட்ட புகார் கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில், "நான் கடந்த செப்டம்பர் 5-ல் என்னுடைய மற்றும் எனது சகோதரரின் சைக்கிள்களை பழுது பார்க்க அருகிலுள்ள சைக்கிள் கடையில் கொடுத்தேன். அதை பழுது பார்ப்பதற்காக ரூ.200-ம் கொடுத்தேன்.
ஆனால், இன்று வரை அந்த சைக்கிள் கடைக்காரர் எங்களின் சைக்கிள்களை திரும்பத்தரவில்லை. நாங்கள் பலமுறை கேட்டும் முறையான பதிலில்லை. சில நேரங்களில் ஃபோன் அழைப்பை ஏற்பதுமில்லை. எங்கள் சைக்கிளை மீட்டுத்தரவும்" எனக் கோரியிருந்தார்.
இது குறித்து மேப்பையூர் காவல் நிலைய அதிகாரி அனுப் கூறும்போது, "அவ்வப்போது பள்ளி மாணவர்களிடமிருந்து ஏதாவது புகார் மனுக்கள் வரும். பெரும்பாலும் அவை போக்குவரத்து தொடர்பாக இருக்கும். ஆனால், இந்த குறிப்பிட்ட புகார் மனு எங்களை வெகுவாகக் கவர்ந்தது.
10 வயது சிறுவன் தனியாக காவல்நிலையத்துக்கு வந்து அந்தப் புகாரை அளித்தார். அவர் அளித்த புகார் தொடர்பாக விசாரித்தோம் சம்பந்தப்பட்ட சைக்கிள் கடைக்காரர் உடல்நலக் குறைவு காரணமாகவும் தனது மகனின் திருமண வேலைகளாலும் சைக்கிளை பழுது பார்ப்பது தாமதமாகிவிட்டதாகக் கூறியுள்ளார். வியாழக்கிழமைக்குள் சைக்கிளை திருப்பியளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்" என்றார்.