கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையின் தலை எதிர்பாராமல் பானைக்குள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரால் குழந்தையை மீட்க முடியாமல் தவிக்க அப்பகுதி தீயணைப்புத் துறையினர் கவனமாக குழந்தையை மீட்டனர். குழந்தையை மீட்ட வீரர்களுக்கு பொது மக்களின் பாராட்டு குவிந்து வருகிறது.
பிரவம் பகுதியைச் சேர்ந்த ஆப்பிரஹாம் - ஜிஜி தம்பதியின் மகள் பியான். 3 வயது குழந்தையான பியன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக ஈயப் பானையை தலையில் கவிழ்த்தியுள்ளார்.
பானையை வெளியே எடுக்க முடியாமல் போகவே குழந்தை கதறி அழுதுள்ளது. குழந்தையின் கூக்குரல் கேட்டு ஓடிவந்து பார்த்த தாய் ஜிஜி பதறிப்போய் குழந்தையின் தலையில் இருந்து பானையை அகற்ற முயற்சித்துள்ளார்.
ஆனால், அது சாத்தியமாகவில்லை. அக்கம்பக்கத்தினர் முயற்சியும் பலனளிக்கவில்லை. குழந்தையோ விடாமல் கூச்சலிட, சமயோஜிதமாக யோசித்த அண்டை வீட்டார் ஒருவர் தனது இருச்சக்கர வாகனத்தில் குழந்தையை அருகிலுள்ள தீயணைப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்.
பெற்றோர், அக்கம்பக்கத்தினரும் அங்கு விரைந்தனர். தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் டி.கே.அசோகன் மற்றும் அவரது குழுவினர் முதலில் குழந்தையை ஆசுவாசப்படுத்தினர். குழந்தையை அச்ச உணர்வில் இருந்து வெளியே கொண்டுவந்த பின்னர் கட்டர்களைப் பயன்படுத்தி பானையை உடைத்து குழந்தையை 15 நிமிடங்களில் மீட்டனர்.
துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.